பீப்பிள்ஸ் லீசிங் ஒரு புதிய தலைமை நிர்வாக அதிகாரியை நியமிக்கிறது


இலங்கை DFCC வங்கியின் சிரேஷ்ட உப தலைவரும் நிறுவன வங்கிச் சேவைப் பிரதானியுமாகிய திரு. ஷமிந்திர மார்செலின், 2020 நவம்பர் 20ஆம் திகதி தொடக்கம் பீப்பிள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பி.எல்.சி.யின் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும்; பொது முகாமையாளராகவும் இணைந்துள்ளார்.

HSBC குழுமத்திற்காக வெளிநாடுகளில் பணியாற்றியதோடு மட்டுமல்லாமல் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வங்கிச் சேவைகளில் பரந்த அனுபவத்தையும் பெற்ற வங்கியாளரான திரு. மார்செலின், பீப்பிள்ஸ் லீசிங் நிறுவனத்தின் மூலோபாய முன்னேற்றத்திற்குப் பங்களிப்புச் செய்யக்கூடிய வகையில் வங்கித் துறை சார்ந்த தனித்துவமான நுண்ணறிவைக் கொண்டுள்ளார்.

அவர் DFCC வங்கியில் சேவையாற்றியபோது, அந்த வங்கியின் நிறுவன வங்கிச் சேவை மூலோபாயங்களை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் நடைமுறைப்படுத்தும் முயற்சிகளுக்குத் தலைமை தாங்கினார்.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்தில், மாலைதீவைச் சேர்ந்த பிரபல கம்பனி ஒன்றினால் பெறப்பட்ட இரட்டைத் தவணை இருதரப்புக் கடன் வசதிக்கான தனி ஆலோசகர் மற்றும் கட்டமைப்பு வங்கிக்குரிய அதிகாரமளிப்பை DFCC பெற்றுக்கொள்வதில் அவர் முக்கிய பங்கினை வகித்தார். இலங்கை DFCC வங்கியினால் வழங்கப்பட்ட மிகப் பெரிய கடன் வசதி இதுவாகும்.

வங்கியின் நிறைவேற்றுக் குழு, சொத்து மற்றும் பொறுப்புக் குழு, செயற்பாட்டு இடர் முகாமைத்துவக் குழு ஆகியவற்றின் அங்கத்தவர் என்ற முறையில் வங்கியின் நிறுவன முன்முயற்சிகளைச் சிறப்பாகப் பயன்படுத்துவதற்கு திரு. மார்செலின் முக்கியமான மூலோபாய பங்களிப்பினை வழங்கினார்

HSBC குழுமத்தின் மாலைதீவு நாட்டிக்கான முகாமையாளர் என்ற முறையில் வெவ்வேறு பதவிகளில் செயலாற்றியதைத் தொடர்ந்தே அவர் DFCC வங்கியில் இணைந்தார்.

மாலைதீவில் வங்கித் தொழிற்றுறையின் புரட்சிகரமான மாற்றத்திற்குப் பங்களிப்புச் செய்த அவர், அந்த வேளையில் மாலைதீவின் மிகப் பெரிய சொத்துத் திரட்டலுக்கும் பொறுப்பாக இருந்தார்.

அபிவிருத்தி, செயற்பாடு மற்றும் நிறுவன ரியல் எஸ்டேட், சர்வதேச உப நிறுவன வங்கிச் சேவை மற்றும் அரச துறை என்பவற்றை உள்ளடக்கிய வணிக மற்றும் உலகளாவிய வங்கிச் சேவை வியாபாரத்தின் வளர்ச்சி அவரது தலைமையிலும் வழிகாட்டுதலிலும் ஒரு வலுவான ஒட்டுமொத்த வங்கிச் சேவை முன்முயற்சியாக விரிவடைந்தது. இதில் இலாப-நட்ட பொறுப்பும் அடங்கியிருந்தது. முக்கிய பங்காளிகள் மற்றும் வியாபாரத் தலைவர்களுடன் மூலோபாய உறவுகளைக் கட்டியெழுப்பவும் அவற்றைத் தொடர்ச்சியாகப் பேணவும் DFCC வங்கிக்கு இடமளிக்கும் விதத்தில், உறவுமுறை மற்றும் வங்கிச் சேவைத் திட்ட முகாமையாளர்களின் அணி ஒன்றினை அவர் வெற்றிகரமாக மேற்பார்வை செய்து வழிநடத்தினார்.

DFCC வங்கியில் இணைவதற்கு முன்னர் திரு. மார்செலின் HSBC ஸ்ரீலங்கா மற்றும் மாலைதீவின் நிதி நிறுவனங்கள் குழு மற்றும் அரச துறையின் பிரதானியாகக் கடமையாற்றினார்.

இலங்கை இறையாண்மை பத்திர மற்றும் குவாஸி இறையாண்மைப் பத்திர நிறுவனங்களின் வெற்றிகரமான முகாமைத்துவம், HSBC குழுமத்தின் முதலீட்டு வங்கியியல் மூலோபாயத்தின் அமுலாக்கம் என்பன அவரது முக்கிய சாதனைகளில் உள்ளடங்கும்.

திரு. மார்செலின் இலங்கையின் வங்கிச் சேவை மற்றும் நிதிச் சேவை துறைகளில் வலுவான தகைமைகளைக் கொண்டுள்ளார். இலங்கையின் முதலீட்டு வாய்ப்புகளை உலகளாவிய ரீதியில் வெளிப்படுத்துவதற்கும் அவர் பங்களிப்புச் செய்துள்ளார்.

நிதியமைச்சு, இலங்கை மத்திய வங்கி, பிரபல அரச மற்றும் தனியார் வணிக வங்கிகள் ஆகியவற்றினால் ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியப் பிராந்தியங்களில் நடத்தப்பட்ட பல்வேறு முதலீட்டு ஊக்குவிப்புப் பிரசார நிகழ்ச்சிகளில் அவர் பங்குபற்றியுள்ளார்.

திரு. மார்செலின் 1993ஆம் ஆண்டு இலங்கையிலுள்ள கொழும்பு சர்வதேசப் பாடசாலையில் உயர் கல்வியை முடித்துக்கொண்டார். லண்டன், சிற்றி பல்கலைக்கழகத்திடமிருந்து 1996இல் பொருளியல் மற்றும் கணக்கியல் துறையில் BSc பட்டம் பெற்ற அவர், நிதி ஆலோசகர்களின் சர்வதேசத் தகைமை (FAIQ), ஐக்கிய இராச்சியத்தின் சாட்டர்ட் இன்சூரன்ஸ் நிலைய தகைமை (2008) ஆகியவற்றையும் பெற்றுள்ளார்.