பேராசிரியர் அஜந்த சமரக்கோன் அவர்கள் பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்
வங்கி அல்லாத நிதிச் சேவைகளில் முன்னோடியான பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ்
பிஎல்சி, தனது பணிப்பாளர் சபையின் புதிய தலைவராக பேராசிரியர் அஜந்த சமரக்கோன்
அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து அறிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின்
அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளதைத் தொடர்ந்து, 2024 டிசம்பர் 31 முதல் இந்நியமனம்
அமுலுக்கு வந்துள்ளது. புகழ்பூத்த கல்விமானும், தொழில் வல்லுனருமான பேராசிரியர்
சமரக்கோன் அவர்கள், தனது புதிய பணிப்பொறுப்புக்கு செழுமையான நிபுணத்துவம் மற்றும்
தலைமைத்துவத்தை சேர்க்கவுள்ளதுடன், கல்வி, தொழில் மற்றும் பொதுச் சேவையில் அவரது
திறமைமிக்க தொழில் வரலாறு இதற்கு ஆதாரமாகவுள்ளது. அவரது நியமனம், பீப்பள்ஸ்
லீசிங் அன்ட் பினான்ஸ் நிறுவனத்தைப் பொறுத்தவரையில் புதிய அத்தியாயமொன்றுக்கான
சமிக்ஞையாகக் காணப்படுவதுடன், நிதிச் சேவைகள் துறையில் புத்தாக்கம் மற்றும்
மகத்துவத்திற்கான தனது நன்மதிப்பை நிறுவனம் தொடர்ந்தும் கட்டியெழுப்பும்.
பேராசிரியர் சமரக்கோன் அவர்கள் தற்போது களனி பல்கலைக்கழகத்தின் வர்த்தக மற்றும்
முகாமைத்துவ கற்கைகள் பீடத்தின் வர்த்தக மற்றும் நிதி முகாமைத்துவப் பிரிவில்
பேராசிரியாக சேவையாற்றி வருகின்றார். அவர் அதே பல்கலைக்கழகத்தில் வர்த்தக
கலைமாணி (விசேட) பட்டத்தையும், முதுமாணிப் பட்டத்தையும் பெற்றுள்ளார். செக் நாட்டின்
கல்வி, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சின் பிரசித்திபெற்ற
சர்வதேசமயமாக்கல் மேம்பாட்டு புலமைப்பரிசிலின் உதவியுடன், செக் குடியரசிலுள்ள Tomas
Bata பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ மற்றும் பொருளியல் பீடத்தில் கலாநிதிப்
பட்டத்தையும் பெற்றுள்ளார். கலாநிதிப் படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு
வழிகாட்டல், ICBI 2017 இன் இணைத்தலைமை அடங்கலாக, சர்வதேச மாநாடுகளில்
பங்குபற்றிய ஆழமான அனுபவம் உள்ளிட்ட கல்வியியல் சாதனைகளுக்குப் புறம்பாக, CMA-
Australia மற்றும் இலங்கை Association of Accounting Technicians (AAT) ஆகியவற்றின்
அங்கத்தவராகவும் பேராசிரியர் சமரக்கோன் அவர்கள் உள்ளார்.
கல்வித்துறைக்கு அப்பால், நிதி மற்றும் கல்வி ஆகிய இரண்டுக்கும் பேராசிரியர் சமரக்கோன்
அவர்கள் கணிசமான பங்களிப்பை வழங்கியுள்ளார். கணக்காய்வு மேற்பார்வையாளராக அவர்
கொண்டுள்ள மூன்று ஆண்டு கால அனுபவம், நிதியியல் நிர்வாக ஆட்சி மற்றும் செயற்பாட்டு
மேற்பார்வையில் அவருக்கு வலுவான அத்திவாரத்தை வழங்கியுள்ளது. அர்ப்பணிப்பு மிக்க
ஆசானாக, 2006 ம் ஆண்டு முதல் க.பொ.த உ/த பரீட்சைக்கான பிரதம பரீட்சகராகவும்
சேவையாற்றியுள்ளதுடன், அரச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் கற்கைநெறி
மேம்பாட்டில் அவர் முக்கிய பங்கு வகித்துள்ளார். இலங்கையில் உயர் கல்வியின்
தராதரங்களை உயர் மட்டத்தில் பேணியமைக்காக, பல்கலைக்கழக மானியங்கள்
ஆணைக்குழுவின் தர நிர்ணய மற்றும் சான்று அங்கீகார பேரவையிடமிருந்து அவருடைய
சேவைக்கும், முயற்சிகளுக்கும் சிறந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சியின் புதிய தலைவராக,
இலங்கையில் வங்கி அல்லாத நிதிச் சேவைகள் துறையில் நம்பிக்கைக்குரிய முன்னோடியாக
தொடர்ந்தும் திகழ்வதை உறுதி செய்து, புத்தாக்கம், நிலைபேற்றியல் மற்றும் தொடர்ச்சியான
மகத்துவம் ஆகியவற்றின் பக்கபலத்துடன் நிறுவனத்தை தொடர்ந்தும் சிறப்பாக வழிநடாத்திச்
செல்லும் தகமையையும், அனுபவத்தையும் பேராசிரியர் சமரக்கோன் அவர்கள்
கொண்டுள்ளார்.