பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் 2024/25 நிதியாண்டின் முதற்பாதியில் 42.4% என்ற மகத்தான இலாப வளர்ச்சியை நிலைநாட்டியுள்ளது
இலங்கையில் வங்கி அல்லாத நிதிச்சேவைகள் நிறுவனங்கள் மத்தியில் முன்னிலை வகித்து
வருகின்ற பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி, 2024 செப்டெம்பர் 30 ல் முடிவடைந்த,
2024/25 நிதியாண்டுக்கான முதல் ஆறு மாதங்களில் சிறப்பான நிதிப் பெறுபேறுகளை
வழங்கி, மீண்டும் ஒரு தடவை தனது நன்மதிப்பை வலுப்படுத்தியுள்ளது. அந்த வகையில்,
ரூபா 12,676 மில்லியன் வருமானத்தைப் பதிவாக்கியுள்ள இந்நிறுவனம், முன்னைய ஆண்டின்
இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 42.4% இலாபத்திறன் அதிகரிப்புடன், ரூபா 1,566
மில்லியன் என்ற மிகச்சிறந்த இலாபத்தையும் பதிவாக்கியுள்ளது. இரண்டாவது காலாண்டின்
வலுவான சாதனைகளே இதற்கு உந்துசக்தியுள்ளதுடன், இக்காலப்பகுதியில் தேறிய வட்டி
வருமானம் 19.5% ஆல் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிறுவனத்தின் செலவு-வருமான விகிதமானது அதன் செயல்பாட்டுத் திறனை
பிரதிபலிப்பதுடன், ஏனைய வருமானங்களின் கணிசமான பங்களிப்புடன் தொழிற்பாட்டு
வருமானம் 21.5% ஆல் வளர்ச்சி கண்டுள்ள அதேசமயம், செலவை மிகவும் கவனத்துடன்
நிர்வகித்தமையால், 2024 செப்டெம்பர் 30 இல் முடிவடைந்த காலப்பகுதியில் தொழிற்பாட்டுச்
செலவுகளின் அதிகரிப்பு 15.7% ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
விவேகமான மற்றும் மூலோபாய நோக்குடனான அணுகுமுறையானது பீப்பள்ஸ் லீசிங்
அன்ட் பினான்ஸ் தொழிற்பாடுகளின் மையமாகவுள்ளமையை இது வெளிக்காண்பிக்கின்றது.
2024 செப்டெம்பர் 30 இல் முடிவடைந்த காலப்பகுதியில் வலுக்குறைப்பு செலவுகள் 63.6%
ஆல் வாபஸ் பெறப்பட்டமை நிறுவனத்தின் பெறுபேறுகளில் மிகவும் குறிப்பிட வேண்டிய
ஒன்றாகக் காணப்படுகின்றது. வலுவான வசூல் முயற்சிகள் மற்றும் மேம்பட்ட கடன் தரம்
ஆகியவற்றின் துணையுடன், திறம்பட்ட கடன் வழங்கல் மறுசீரமைப்பினை இச்சாதனை
பிரதிபலிக்கின்றது. வலுக்குறைப்பு தொடர்பான ஆபத்துக்களைக் கட்டுப்படுத்துவதில் கடன்
மூலமாக ஏற்படும் இழப்புக்கள் முக்கிய பெறுபேற்றுத்திறன் குறிகாட்டிகளில் ஒன்றாக (KPI)
பயன்படுத்தப்படுவதை நிறுவனம் சிறப்பாக முன்னெடுத்துள்ளமையானது, ஆபத்து
முகாமைத்துவம் தொடர்பில் பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சியின் விரைவூக்கம்
கொண்ட மற்றும் மூலோபாயரீதியான அணுகுமுறையைக் காண்பிக்கின்றது.
மீளாய்விற்குட்படும் இக்காலப்பகுதியில், நிறுவனத்தின் கடன் மற்றும் வருமதித் துறையும்
9.9% ஆல் வளர்ச்சி கண்டுள்ளமையானது, இதன் ஐந்தொகையை மேலும் வலுப்படுத்தி,
மொத்தச் சொத்துக்களை ரூபா 147,559 மில்லியன் தொகையாக அதிகரிக்கச் செய்துள்ளது.
2024 மார்ச் 31 இல் பதிவாக்கப்பட்ட தொகையுடன் ஒப்பிடுகையில் இது கணிசமான
அதிகரிப்பாகும்.
மீளாய்வுக்குட்படுகின்ற காலப்பகுதியில் நிறுவனத்தின் மிகச் சிறந்த பெறுபேறுகள் குறித்து
அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி சஞ்சீவ பண்டாரநாயக்க அவர்கள் கருத்துத்
தெரிவிக்கையில், “இலங்கையில் வங்கி அல்லாத நிதிச் சேவைகளை வழங்குவதில் முன்னணி
நிறுவனங்களில் ஒன்று என்ற ரீதியில், நெகிழ்திறன் மற்றும் புத்தாக்கத்திற்கு நாம் தொடர்ந்து
முன்னுரிமையளித்து வந்துள்ளோம். இலாபத்திறனை மேம்படுத்துதல், எமது ஐந்தொகையை
வலுப்படுத்துல் மற்றும் மாறிவருகின்ற பொருளாதார சூழ்நிலைகளுக்கேற்ப எம்மை
மாற்றிக்கொள்ளல் ஆகியன குறித்த எமது ஆற்றல், எமது வாடிக்கையாளர்களுக்கும், எம்முடன்
தொடர்புபட்ட அனைத்து தரப்பினருக்கும் மதிப்பை வழங்குவதில் எமது ஓயாத
அர்ப்பணிப்பின் பிரதிபலிப்பாகக் காணப்படுகின்றன. நிலைபேணத்தக்க வளர்ச்சி மற்றும்
நீண்ட கால அடிப்படையிலான வெற்றி ஆகியவற்றில் நாம் கவனம் செலுத்தியுள்ள நிலையில்,
எமது பணியாளர்கள் அணியின் அர்ப்பணிப்பு மற்றும் எம்முடன் தொடர்புபட்ட தரப்பினர்
அனைவரும் எம்மீது வைத்துள்ள நம்பிக்கை ஆகியவற்றை இப்பெறுபேறுகள்
அடிக்கோடிட்டுக் காண்பிக்கின்றன. பரந்த தேசிய பொருளாதார வளர்ச்சியுடன் இணைந்து,
இலங்கை மக்கள் அனைவரதும் பொருளாதார அபிலாஷைகளுக்கு உதவுவதில் நாம்
தொடர்ந்தும் மிகவும் உறுதியாகவுள்ளோம்,” என்று குறிப்பிட்டார்.
வலுவான நிதி நிலைமையை தொடர்ச்சியாக வெளிக்காண்பித்து, தனது தொழிற்பாடுகளை
தொழில்துறையின் மிகச் சிறந்த நடைமுறைகளுக்கு அமைவாக ஒன்றிக்கச் செய்து, வங்கி
அல்லாத நிதிச்சேவைகளை வழங்குவதில் முன்னணி நிறுவனம் என்ற தனது மகத்துவத்தை
பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி தொடர்ந்தும் சிறப்பாக முன்னெடுத்து வருகின்றது.
மகத்தான அளவில் அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சி ஆகியவற்றின்
மத்தியில் இலங்கை பயணித்து வருகின்ற நிலையில், அதிகரித்துச் செல்லும் வாய்ப்புக்களை
வசப்படுத்தி, எதிர்வரும் காலங்களில் நிலைபேணத்தக்க வளர்ச்சி மற்றும் நெகிழ்திறனை
உறுதி செய்வதற்கு பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி தயாராகவுள்ளது.