பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸின் GoldCash Card தற்போது தங்கக்கடன் துறையில் புரட்சிக்கு வித்திட்டுள்ளது 


இலங்கையிலுள்ள மிகவும் நம்பிக்கைக்குரிய வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் ஒன்றான பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி, ஒக்டோபர் 1 ஆம் திகதி முதற்கொண்டு வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கவுள்ள GoldCash Card என்ற புத்தாக்கமான தீர்வை ஆரம்பிப்பது குறித்து மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. ஒட்டுமொத்த துறையையும் மாற்றியமைக்கும் வல்லமை படைத்த இத்தீர்வானது வாடிக்கையாளர்கள் தமது தங்க நகைகளுக்கு பதிலாக கடனைப் பெற்றுக்கொள்வதற்கு மிகவும் சௌகரியமான, நெகிழ்வுத்தன்மை கொண்ட மற்றும் பாதுகாப்பான வழிமுறையை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.   

இதனை அறிமுகப்படுத்துவது குறித்து பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரி சஞ்சீவ பண்டாரநாயக்க அவர்கள் கருத்து வெளியிடுகையில், “எமது வாடிக்கையாளர்களின் பல்வகைப்பட்ட தேவைகளை தீர்த்து வைக்கும் புத்தாக்கமான நிதித் தீர்வுகளை வழங்குவதில் நாம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை GoldCash Card காண்பிக்கின்றது. தமது நிதியை மிகவும் திறன்மிக்க வழியில் நிர்வகித்து, புதிய வாய்ப்புக்களை நம்பிக்கையுடன் கையிலெடுப்பதற்கு சௌகரியமான, தங்குதடையின்றிய அணுகல் கொண்ட, நெகிழ்வுத்தன்மையுடனான மற்றும் பாதுகாப்பான வழியில் GoldCash Card அவர்களுக்கு வலுவூட்டுகின்றது. தங்கக்கடன்கள் மற்றும் நிதியைப் பெற்றுக்கொள்வதற்கான அணுகலை மேலும் இலகுவாக்குவதனூடாக நிதியியில்ரீதியான அரவணைப்பு உள்ளடக்கத்தை மேம்படுத்துவதற்கு உதவ முடியும் என நாம் நம்புகின்றோம்,” என்று குறிப்பிட்டார்.       

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சியின் தலைவர் திரு. பிரதீப் அமிர்தநாயகம் அவர்கள், “எமது தலைவரின் விருது முயற்சியின் அங்கமாக எமது ஊழியர்களில் ஒருவர் முன்வைத்த சிந்தனையிலிருந்து உதித்த GoldCash Card முன்மொழிவு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதை காண்பது எனக்கு மிகவும் பெருமையளிக்கின்றது. எமது நிறுவனத்தினுள்ளேயே தீர்வுகளை வெளிக்கொண்டு வரும் கலாச்சாரத்தை வளர்ப்பதில் எமது அர்ப்பணிப்பை இது பிரதிபலிக்கின்றது. புத்தாக்கத்தின் மீதான எமது உற்சாகம்மிக்க உணர்வு தொடர்ந்தும் மடை திறந்த வெள்ளம் போல் பொங்கிப் பாய்வதை உறுதி செய்து, நிறுவனத்தினுள் சிந்தனை வளத்தைப் பெருக்குவதில் PLC மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளது,” என்று குறிப்பிட்டார்.        

ஈடுஇணையற்ற சௌகரியத்தை வழங்குவதற்கு புறம்பாக, காகித பாவனையற்ற நடைமுறையினூடாக சூழல் நிலைபேற்றியலுக்கும் GoldCash Card போன்ற தீர்வுகள் பங்களிக்கின்றன. கடன் விண்ணப்பங்கள் மற்றும் பரிவர்த்தனைகளை டிஜிட்டல்மயமாக்கல் செய்வதனூடாக, வாடிக்கையாளர்கள் கடன்களுக்கு விண்ணப்பிக்கவும், தமது கணக்கு மீதிகளை சரிபார்க்கவும், அட்டை மற்றும் மொபைல் செயலி ஆகியவற்றை பயன்படுத்தி கொடுப்பனவுகளை இணையவழியாக மேற்கொள்ளவும், எங்கிருந்தும், எப்போதும் நிதிகளை தங்குதடையின்றி அணுகுவதற்கும் வாடிக்கையாளர்களுக்கு வாய்ப்புக் கிட்டியுள்ளது. பௌதிகரீதியான ஆவணங்கள் மற்றும் கிளைகளுக்கு செல்ல வேண்டிய தேவைகளைப் போக்கி, இப்புத்தாக்கங்கள் வாடிக்கையாளர்களின் சௌகரியத்தை மேம்படுத்துவது மாத்திரமன்றி, காகித கழிவுகளை குறைத்து, வினைதிறனை ஊக்குவித்து, பசுமை பேண் நடைமுறைகளுக்கும் உதவுகின்றன.      

ஒரு சுழல் கடன் வசதியான GoldCash Card, வாடிக்கையாளர்கள் தமது நிதித் தேவைகளுக்கேற்ப கடனைப் பெற்று, மீளச் செலுத்தி, மீளவும் கடனைப் பெறுவதற்கு இடமளிப்பதுடன், தமது கடன்கள் மற்றும் கடன் எல்லைகளை முழுமையாக தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க இடமளிக்கின்றது. நெகிழ்வுப்போக்குடனான மீள் கொடுப்பனவுத் தெரிவுகள் இத்தீர்வின் மீதான ஈர்ப்பினை மேலும் அதிகரிப்பதுடன், வாடிக்கையாளர்கள் தமது நிதி நிலைமைகளுக்கேற்ப செலுத்த வேண்டிய தொகையை மீள செலுத்தும் வசதியையும் உறுதி செய்கின்றது. வட்டிக் கொடுப்பனவுகள் குறித்த நேரத்தில் மேற்கொள்ளப்படும் பட்சத்தில், தன்னியக்க முறையில் கடன் மீள்புதுப்பித்தல் வசதியும் இதில் அடங்கியுள்ளதுடன், செயல்முறையை இலகுபடுத்தி, அவ்வப்போது மீள விண்ணப்பிக்க வேண்டிய தேவையையும் போக்குகின்றது.   

பாதுகாப்பு என்பதற்கே GoldCash Card உச்ச முன்னுரிமையளிக்கின்றது. பெருந்தொகை பணத்தை கையில் எடுத்துச் செல்ல வேண்டிய தேவையைப் போக்கி, திருட்டு அல்லது இழப்புடன் தொடர்புபட்ட ஆபத்துக்களை வாடிக்கையாளர்கள் குறைத்துக்கொள்ள உதவுகின்றது. மேலும், பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸின் பாதுகாப்பான இணைய வங்கிச்சேவை தளங்கள் மூலமாக தாம் மேற்கொள்கின்ற செலவுகள் மற்றும் கடன் மீள்கொடுப்பனவுகளை இலகுவாக கண்காணித்து மற்றும் நிர்வகிப்பதற்கும் முடியும் என்பதால், வாடிக்கையாளர்கள் தமது நிதி நடவடிக்கைகளை முழுமையாக தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை உறுதி செய்கின்றது. இப்புதிய நிதிக் கருவியானது சிறு வியாபார உரிமையாளர்கள், இல்லத்தரசிகள், ஓய்வுபெற்றவர்கள், சீரற்ற வருமானத்தைக் கொண்ட நபர்கள் மற்றும் ஏனைய நுகர்வோருக்கு வாழ்வளிப்பதுடன், தமது கணக்குகளில் மேலும் தங்கத்தை சேர்ப்பதனூடாக, தமது கடன் எல்லைகளை அதிகரித்துக் கொள்ள அவர்களுக்கு இடமளிக்கின்றது.

புத்தாக்கமான, வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட தீர்வுகளை தொடர்ந்தும் வழங்கி, தனிநபர்களும், வியாபாரங்களும் கடனை நெகிழ்தன்மையுடனும், பாதுகாப்பாகவும் அணுகக்கூடிய வழிமுறைகளை பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் தொடர்ந்தும் வழங்கி வருகின்றது. GoldCash Card இன் அறிமுகத்தின் மூலமாக, தனது பல்வகைப்பட்ட வாடிக்கையாளர்களது நிதித் தேவைகளை நிறைவேற்றும் தனது அர்ப்பணிப்பை இந்நிறுவனம் மீளவும் உறுதிப்படுத்தியுள்ளதுடன், இலங்கையில் அனைத்து மக்களினதும் நம்பிக்கைக்குரிய நிதிக் கூட்டாளராக தனது வகிபாகத்தை மேலும் வலுப்படுத்தி வருகின்றது.  

பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி தொடர்பான விபரங்கள்

இலங்கையிலுள்ள அனுமதி உரிமம் பெற்ற, வங்கி அல்லாத நிதி நிறுவனமான பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி, அதன் புத்தாக்கம் மற்றும் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட நிதியியல் தீர்வுகளை வழங்குவதில் ஓயாத அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்கு பெயர்பெற்றுள்ளது. வலுவான அத்திவாரம், பல்வகைப்பட்ட தீர்வுகள் வரிசை, மற்றும் மகத்துவத்தின் மீதான அர்ப்பணிப்பு ஆகியவற்றுடன் நிதியியல் சேவைகள் துறையில் முன்னிலை வகிக்கும் நிறுவனமாக PLC தலையெடுத்துள்ளது. மக்கள் வங்கியின் துணை நிறுவனம் என்ற ரீதியில், இலங்கை மக்களுக்கு வளர்ச்சி மற்றும் சுபீட்சத்தை வளர்த்து, நிதியியல் சேவைகளை வழங்குவதில் நம்பிக்கைக்குரிய, நன்மதிப்பும் மிக்க தனது ஸ்தானத்தை PLC தொடர்ந்தும் வலுப்படுத்தி வருகின்றது.