பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் ACEF Asian Business Leaders Awards நிகழ்வில் தங்க விருதை வென்று பிரகாசித்துள்ளது


இலங்கையில் வங்கி அல்லாத நிதிச் சேவைகள் துறையில் முன்னணி செயல்பாட்டாளரான பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி, ACEF Asian Business Leaders Awards விருதுகள் நிகழ்வில் “Best Leasing Brand of the Year” (வருடத்தின் மிகச் சிறந்த குத்தகை வர்த்தகநாமம்) என்பதற்காக மதிப்பிற்குரிய தங்க விருதை வென்று சர்வதேச அரங்கில் தனது முத்திரையை மீண்டும் ஒரு தடவை பொறித்துள்ளது. இந்த பாராட்டு அங்கீகாரமானது ஆசியாவிலுள்ள மிகவும் செல்வாக்கு மிக்க வர்த்தக நிறுவனங்கள் மத்தியில் பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் நிறுவனத்தையும் இடம்பெறச் செய்துள்ளதுடன், மகத்துவம், புத்தாக்கம் மற்றும் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய சேவை ஆகியவற்றின் மீது அது கொண்டுள்ள அர்ப்பணிப்பையும் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது.     

இவ்விருதை ஈட்டியுள்ளமை குறித்து பெருமிதத்துடன் கருத்து வெளியிட்ட பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சியின் தலைவர் பிரதீப் அமிர்தநாயகம் அவர்கள், “ACEF Asian Business Leaders Awards நிகழ்வில் மிகச் சிறந்த குத்தகை வர்த்தகநாமத்திற்கான தங்க விருதை ஏற்றுக்கொள்வது எமக்கு மிகவும் கௌரவமளிக்கின்றது. இந்த அங்கீகாரம், எமது நிறுவனத்திற்கு மிகவும் முக்கியமானதொரு சாதனை மைல்கல்லாக மாறியுள்ளதுடன், மகத்துவம், வாடிக்கையாளர் திருப்தி மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றில் நாம் கொண்டுள்ள அர்ப்பணிப்பையும் மீள வலியுறுத்துகின்றது. எமது செயல்பாடுகள் அனைத்திலும் வாடிக்கையாளர்களை மையப்படுத்துவதில் நாம் எப்போதும் நம்பிக்கை கொண்டுள்ளதுடன், இலங்கை மக்கள் மத்தியில் பரிமாண மாற்றம் கண்டு வருகின்ற தேவைகளை நிறைவேற்றுவதில், புத்தாக்கம் மிக்க, தனிப்பயனாக்கம் செய்யப்பட்ட குத்தகைத் தீர்வுகளை வழங்கும் எமது முயற்சிகளை இவ்விருது நிரூபித்துள்ளது,” என்று குறிப்பிட்டார்.

புத்தாக்கம், தலைமைத்துவம் மற்றும் சந்தையில் விளைவிக்கும் தாக்கம் போன்ற பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் துறைசார் வல்லுனர்கள் அடங்கிய சுயாதீன நடுவர் குழுவால் வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டு, பல்வேறுபட்ட தொழில்துறைகள் மத்தியில் மிகச் சிறந்த பங்களிப்புக்களை ACEF Asian Business Leaders Awards விருதுகள் நிகழ்வு போற்றிக் கொண்டாடுகிறது. இலங்கையின் முதன்மையான குத்தகை வர்த்தகநாமங்களில் ஒன்று என்ற தனது நன்மதிப்பை வலுப்படுத்தியவாறு, வங்கி அல்லாத நிதித்துறையில் வலுவான ஆதிக்கத்தைச் செலுத்தும் பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸின் வகிபாகத்தை தங்க விருதை வென்றுள்ளமை மீள உறுதிப்படுத்தியுள்ளது.     

இந்த பெருமதிப்பிற்குரிய அங்கீகாரத்திற்குப் புறம்பாக, வாடிக்கையாளர்களை மையப்படுத்திய சேவை மற்றும் ஆதிக்கம் செலுத்தும் வர்த்தகநாம இருப்பு ஆகியவற்றில் அதன் அர்ப்பணிப்பை வெளிக்காண்பித்து, பல்வேறு உள்நாட்டு மற்றும் சர்வதேச அங்கீகாரங்களையும் நிறுவனம் சமீபத்தில் பெற்றிருந்தது. இவ்விருதின் முக்கியத்துவம் குறித்து, வர்த்தகநாமங்கள் மற்றும் தொடர்பாடல்களுக்கான உதவிப் பொது முகாமையாளர் ரஜீவ் டேவிட் அவர்கள் கருத்து வெளியிடுகையில், “மிகச் சிறந்த வங்கி அல்லாத நிதி நிறுவன வர்த்தகநாமத்திற்கான தங்க விருதை வென்றுள்ளமையையிட்டு நாம் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளோம். எமது வாடிக்கையாளர்களுக்கு மாத்திரமன்றி, எம்முடன் தொடர்புபட்ட அனைத்து உட்புற தரப்பினருக்கும் வர்த்தகநாம அனுபவமொன்றைத் தோற்றுவிக்க வேண்டும் என்பதே எமது இலக்கு. ஈற்றிலே எமது உட்தரப்பு வாடிக்கையாளர்களே தமது அனுபவத்தை வெளிப்புற தரப்பினருக்கு வழங்குவதுடன், அந்த கூட்டு உழைப்பினை வளர்ப்பதில் நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம்,” என்று குறிப்பிட்டார்.    

இவ்விருதுடன், வாடிக்கையாளர் திருப்தி மற்றும் நம்பிக்கை ஆகியவற்றிற்கான அர்ப்பணிப்பிற்காக புகழ்பெற்றுள்ள, ஆசியாவிலுள்ள வங்கி அல்லாத உச்ச நிதி நிறுவனங்கள் மத்தியில் தனது ஸ்தானத்தை பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் மேலும் வலுப்படுத்தியுள்ளது. இத்தொழில்துறையில் வளர்ச்சியும், வெற்றியும் நிறைந்த தனது பயணத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதில் நிறுவனம் மிகவும் ஆவல் கொண்டுள்ளது.   

புகைப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சி: PLC இன் தலைவர் திரு. பிரதீப் அமிர்தநாயகம் (மத்தி) மற்றும் திரு. நீல் லந்தேகும்புர, உதவிப் பொது முகாமையாளர், கிளை வலையமைப்பு (வலது) ஆகியோர் The Digital Fellow.com இன் ஸ்தாபகர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. சுபோபுரோட்டோ சக்ரபர்த்தி அவர்களிடமிருந்து விருதைப் பெற்றுக்கொள்ளும் காட்சி. 

புகைப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சி – வர்த்தகநாமங்கள் மற்றும் தொடர்பாடல்களுக்கான உதவிப் பொது முகாமையாளர் ரஜீவ் டேவிட்